Tuesday, November 20, 2007

ஏழுமலை, சபரிமலைக்கு போட்டியாக திருவண்ணாமலை !

கடவுள் மொழியை கடந்தவர், மலையை கடந்தவர், மாநிலத்தை கடந்தவர், கடலை (நாடுகளை) கடந்தவர், என்று சொல்லுவார்கள். இவையெல்லாம் சொல்லப்படுவது பாமரனுக்கு மட்டும் தான். பாமரர்களைத் தவிர்த்து அதில் ஈடுபாட்டுடன் இருப்பவர் பெரும்பாலும் ஒருபக்கமாகத் தான் இருப்பார்கள், திருப்பதிக்கு செல்லும் வைணவர்கள், சிவதலங்களை புறக்கணிப்பதும் அது போன்று தீவிர சைவர்களும் நடப்பதும் உண்டு.தமிழகத்திலிருந்து திரண்டு சென்று வரும் பக்தர்களின் கருணை பார்வையால் உண்டியலை நிரப்பிக் கொள்ளும் பாக்கியம் ஆந்திர திருப்பதிக்கும், கேரள சபரிமலைக்கும் தான் கிடைத்தது. கடந்த 10 ஆண்டுகளாக தமிழக பக்தர்களின் திடீர் கருணை பார்வை தமிழக கோவில்களின் பக்கமும் திரும்பி இருப்பது நலமான செயல்தான். குறிப்பாக திருஅண்ணாமலையார் கோவிலுக்கு செல்வதும், மலையை சுற்றிவருவதும் (கிரி வலம்) நடந்தேறிவருகிறது.உண்டியல் காசு பார்க்கும் ஆலயம் அடியார்களுக்கு எவ்வித வசதியும் செய்து கொடுப்பது இல்லை என்ற செய்திகளும், மலையைச் சுற்றிவரும் பக்தர்கள் சமூக பகைவர்களின் தாக்குதாலுக்கு உள்ளாவதும், இடிராசாக்களின் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளும் முழுமதி (பெளர்னமி) தோறும் நடந்தேறுகிறது.திருவண்ணாமலை தீபத் திருநாளான நேற்றும் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கு அடங்காத அளவுக்கு குவிந்திருப்பதாக செய்திகள் வருகிறது. காசுள்ள கனவான்களுக்கு எல்லாவித வசதியும் கிடைக்கிறதாம். மற்றவர்கள் எப்போதும் போல் மிதிபட்டு கொண்டிருக்கிறார்கள். கருணாநிதி அரசு போதிய பாதுகாப்பு செய்யவில்லை என்ற ரெடிமேட் காரணங்கள் அவற்றையெல்லாம் புறந்தள்ளிவிடும்.திருவண்ணாமலை திருப்பதி போன்று ஆன்மிக நிறுவனமாக வளர்ந்துவிட்ட நிலையிலும் கோவில் நிர்வாகக் குழுக்கள் திருப்பதியில் பக்தர்களுக்கு செய்வது போல் எதையும் செய்வதில்லை.*****திருவண்ணாமலை பற்றி மேலும் சில தகவல்கள்,காஞ்சிபுரத்துக்கு அடுத்து திருவண்ணாமலை ஒருகாலத்தில் சமணர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது, ஞான சம்பந்தர்காலத்திற்கு பிறகு அங்கிருந்த சமணர்களை துறத்திவிட்டு சைவர்கள் அதை வளைத்தனர். அண்ணா மலையார் என்ற பெயரில் உறைந்த சிவன் அருணாச்சலேஸ்வரர் என்று வைதீக மதம் மாற்றப்பட்டார். சாமிகளுக்கே மதமாற்றம் அதுவும் 6 - 7 ஆம் நூற்றாண்டுகளில். உலகிலேயே கடவுளுக்கும் கூட மதமாற்றம் முதலில் நிகழ்ந்தது தமிழகத்தில் தான் என்பதில் நாமெல்லாம் பெருமை கொள்ளலாம். சமணர்கள் ஆதிக்கம் இருந்த இடங்களிலெல்லாம் பின்னால் சைவம் நிலைபெற்றது ( எ.கா திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மற்றும் மதுரை)

No comments: